105 டன் யானை தந்தம், 1.35 டன் காண்டா மிருகங்களின் கொம்புகளை எரித்த அளித்த கென்யா

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றன. இப்படி, கொல்லப்படும் யானைகளின் தந்தம் ஆசிய நாட்டு கள்ளச்சந்தைகளில் ஒருகிலோ சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை விலைபோகிறது.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காண்டா மிருகங்களின் கொம்புகள் ஒருகிலோ சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது, இது, தங்கத்தைவிட கூடுதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்கு ஆசைப்பட்டு யானைகளையும், காண்டா மிருகங்களையும் கொன்று அவற்றின் தந்தங்கள் மற்றும் கொம்புகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பலின் அட்டூழியம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது.

அரசு விழிப்புடன் கண்கானித்து வருவதால் கடத்தல்காரர்கள் காவலர்களிடம் சிக்குவதும், யானை தந்தங்கள் மற்றும் காண்டா மிருகங்களின் கொம்புகள் பறிமுதல் செய்யப்படுவது கென்யா நாட்டு ஊடகங்களில் புளித்துப்போன செய்திகளாக வலம் வந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 105 டன் எடைகொண்ட 16 ஆயிரம் யானை தந்தம் மற்றும் 1.35 டன் எடையுள்ள காண்டா மிருகங்களின் கொம்புகளை இன்று தீயிட்டு எரித்து, அழிக்க கென்யா அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக, நைரோபி நகரில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் மிகப்பெரிய அளவிலான 11 சிதைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் யானை தந்தங்களும், காண்டா மிருகங்களின் கொம்புகளும் போர்போராக கொட்டி குவிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல்களை ஊற்றி இவற்றை எரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு கென்யா நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா, முதல் சிதைக்கு தீமூட்டி இந்த தகனத்தை தொடங்கி வைக்கிறார். அண்டை நாடான உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி கபோன் நாட்டின் அதிபர் அலி பொங்கே உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

உலகிலேயே இவ்வளவு தந்தங்கள் ஒரே இடத்தில் ஒரே நாளில் எரிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் இந்த காட்சிகளை தங்களது கேமராக்களில் சிறைப்படுத்த ஏராளமான நாடுகளை சேர்ந்த நிருபர்களும் இங்கு குவிந்துள்ளனர்.