கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் பைராபுராவில் இருந்து 62 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை,பெங்களூருவுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின.
இந்த சிலை 30 எடை தூக்கும் இயந்திரங்களின் உதவியுடன் 300 சக்கர லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று பெங்களூரு நோக்கி கொண்டுவரப்பட்டது. இதனால் நேற்று காலையில் ஓல்ட் மெட்ராஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீராம சைதன்யா அறக்கட்டளையின் செயலர் மஞ்சு கூறும்போது, “பெங்களூருவில் உள்ள காச்சரக்கனஹள்ளி ராமர் கோயிலில் 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக 62 அடி நீளமுடைய ஒரே கல்லை சுமார் 6 மாதங்களாக நாடு முழுவதும் தேடினோம். கோலாரில் இந்த கல் கிடைத்த பின்னர் ரூ.10 கோடி செலவில் 30 சிற்பிகளைக் கொண்டு ஆஞ்சநேயர் சிலை உருவாக்கும் பணிகள் தொடங்கின. பணிகள் முடியாத நிலையில், 4 அடி அகலமும் 750 டன் எடையும் கொண்ட இந்த சிலையை பெங்களூரு கொண்டுசெல்கிறோம்.
அங்கு சென்ற பிறகு சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். இந்தப் பணி முடிந்த பின்னர் அடுத்த ராம நவமி தினத்தன்று இந்த ஆஞ்சநேயர் சிலை முறையாக பிரதிஷ்டை செய்யப்படும். இந்த சிலை நிறுவப்பட்டால் உலகிலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை என்ற பெருமை இதற்கு கிடைக்கும்” என்றார்.