புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா… அந்த மணமகள்தான் வந்த நேரமடா

Kohli credits wifeசென்சூரியன்: கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் கடைசி ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 204 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி வென்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் மண்ணில் இந்திய அணிக்கு கிடைத்துள்ள முதல் தொடர் வெற்றி இதுவாகும். நேற்றைய ஆட்டத்தில், கேப்டன் விராட் கோஹ்லி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவித்து, பல்வேறு சாதனைகளை முறியடித்தார். 200வது ஒருதினப் போட்டியில் சதம், மிகக் குறைந்த போட்டிகளில் அதிக சதம், ஒரு இருதரப்பு தொடரில் மூன்று சதங்கள் ஒரு தொடரில் அதிக ரன்கள் என, பல சாதனைகளை முறியடித்தார், புது மாப்பிள்ளை விராட் கோஹ்லி. ஆட்ட நாயகன், தொடர் நாயகனான அனுஷ்கா சர்மாவின் நாயகன், போட்டிக்கு பிறகு கூறியது மிகவும் முக்கியமானது. இந்தத் தொடரில், ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். மைதானத்துக்கு வெளியே, பலரும் என்னை ஊக்குவித்தனர். அதில் குறிப்பிட வேண்டியவர் என்னுடைய மனைவி அனுஷ்கா. இதற்கு முன் விமர்சகராக இருந்த அவர், தற்போது என்னை ஊக்குவிப்பவராக மாறியுள்ளார் என்று கோஹ்லி கூறியுள்ளார்.