புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகநாடுகளுடன் போட்டியிடும் தமிழகம்- காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிப்பு-சர்வதேச அளவில் 9-வது இடம்

Image result for WIND MILLபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலக நாடுகளுடன் தமிழகம் போட்டியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், முதல் 10 இடத்துக்குள் தமிழகம் வந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தற்போது எரிசக்தி உற்பத்தியில், மரபுசாரா எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் சூரிய ஒளி பூங்காக்கள், காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த திங்க்- டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) மரபுசாரா எரிசக்தி தொடர்பாக கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்டது. உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், டென்மார்க் 53 சதவீதத்துடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் உருகுவேவும் உள்ளது தெரியவந்தது. இந்த பட்டியலில் தமிழகம் 14 சதவீத உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் 9 வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலிடம்Image result for WIND MILL

நாட்டிலேயே மரபுசாரா மின் உற்பத்தி நிறுவு திறனில் தமிழகம் (10 ஆயிரத்து 710 மெகாவாட்) முதலிடத்தில் உள்ளது. காற்றாலையை பொறுத்தவரை, 7 ஆயிரத்து 957 மெகாவாட்டுடன் குஜராத் (5,429), மகாராஷ்டிரா (4,752) மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில், ஆந்திரா (2,010), ராஜஸ்தான் (1,961) மாநிலங்களுக்கு அடுத்து தமிழகம் ஆயிரத்து 864 மெகாவாட்டுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர, காய்கறி கழிவுகள் மூலம் 230 மெகாவாட், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவற்றில் இணை மின் உற்பத்தி மூலம் 659 மெகாவாட் மின்சார நிறுவுதிறனும் மரபுசாரா மின்சக்தியில் அடங்கும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழகத்தில் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் அதிகப்படியான இடைவெளி இருந்த நிலையில், தற்போது வளமான காற்று மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்த தொடங்கியதும், தெளிவான கொள்கைகளை தமிழக அரசு வகுத்ததும் இதற்கு காரணம் என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் தென்தமிழகம்Related image

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மட்டும் தற்போது 4,869 காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல் திண்டுக்கல், கோவை மாவட்டத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 4500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் சீஸன் காலங்களில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரையில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்துவரும் ஓராண்டுக்குள் காற்றாலைகள் மூலம் மேலும் ஆயிரத்து 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காற்றாலைகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தென் தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மின்உற்பத்தியில் இந்தியாவின் சுஸ்லான், ஜெர்மனியின் சீமேன் ஹமீசா நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. இது தொடர்பாக சுஸ்லான் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெ.பி.சாலாசானி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி டன்கேன் கொயர்பெல் ஆகியோர் கூறும்போது, “காற்றாலை மின் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான ராட்சத காற்றாலை (S128) நிறுவப்பட்டு மின்உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. 140 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலையிலிருந்து 2.6 முதல் 2.8 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றுவீச்சு குறைந்த நேரங்களிலும் ஓரளவுக்கு மின்உற்பத்தி செய்யும் வகையில் இதில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய காற்றாலைகளை நிறுவுவதன் மூலம் மின்உற்பத்தி அளவை மேலும் அதிகரிக்க முடியும்” என்றனர்Image result for TAMIL NADU.