உடுமலை அருகே வாய்க்காலில் காருடன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Image result for உடுமலை அருகே வாய்க்காலில் காருடன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை?உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் காருடன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மடத்தூர் மயிலாபுரத்தைச் சேர்ந்த குருசாமி – ஜெயலட்சுமி தம்பதியின் மகன் அருண்சங்கர் (35). இவர், உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியில் கார் வீல் அலைன்மெண்ட் சேவை மையம் நடத்தி வந்தார்.

உடுமலை போடிபட்டி ரெவின்யூ நகரைச் சேர்ந்த குருராஜ் என்பவரின் மகள் மஞ்சுளா (30). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் அருண்சங்கரும், மஞ்சுளாவும் காணாமல் போய்விட்டதாக பெற்றோர்கள் தரப்பில் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் உடுமலை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அருண்சங்கர் பயன்படுத்திய செல்போன் டவர் இடம் குறித்து ஆய்வு செய்தபோது, சின்னப்பாப்பனூத்து கிராமத்தை ஒட்டிய பிஏபி வாய்க்கால் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, பிஏபி வாய்க்கால் வழியாகச் சென்ற ஒருவர் வாய்க்காலில் கார் கவிழ்ந்து கிடப்பதாக, தளி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீஸார், தண்ணீருக்கு அடியில் கார் தலைகுப்புற கிடப்பதை உறுதி செய்தனர்.

தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. காருக்குள் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலம் இருந்தது.

மேற்படி காணாமல் போனவர்களின் சடலம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இருவரது சடலங்களும், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களின் காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காருடன் வாய்க்காலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.